பெருகிவரும் இந்திய இணையம் குறித்து கவலை

இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து வருவதன் மூலம், இணையத்தை அணுகித் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. 

இது குறித்து, அனைத்து நாடுகளும் மகிழ்ச்சி தெரிவித்தாலும், ஒரே ஒரு நாடு மட்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அது அமெரிக்க அரசு தான்.

மிக அதிக எண்ணிக்கையில் பயனாளர்கள் இந்தியாவில் பெருகி வருவதனால், ஆன் லைன் தகவல் திருட்டும் அதிகமாகும் என அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. 

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள், அண்மையில் அளித்துள்ள அறிக்கையில் (Special 301 Report for 2015) இந்தக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயனாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியில், எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜூன் முடிவிற்குள்ளாக, மொபைல் வழி இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில், 21 கோடியே 30 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது கடந்த ஆறு மாதங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், வளர்ச்சி 23% ஆக உள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டின் இறுதியில், 37 கோடியாக உயர்ந்து, உலகில் இரண்டாவது நாடாக அமையும் என்று தெரிகிறது. 

இந்த அபரிதமான வளர்ச்சியை எதிர்பார்த்து, இந்திய அரசு, தன் சட்டதிட்டத்தில், இணையத் தகவல் திருட்டைத் தடுப்பதற்குண்டான, பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளையும், சட்டப் பிரிவுகளை ஏற்படுத்தி, அவற்றை அமல்படுத்தும் வழிகளையும், அமெரிக்க அரசு, இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது. 

இணையத்தில் தகவல் திருட்டுகளைக் கண்டறியும் எக்ஸிபியோ (Excipio) என்னும் நிறுவனம், அண்மையில், கட்டணம் செலுத்தி மட்டுமே பார்க்கக் கூடிய சில திரைப்படங்களை, அதிக அளவில் திருட்டுத் தனமாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்ததில், இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது என்று அறிவித்துள்ளது. 

வின் டீசல், என்னும் நடிகர் நடித்த ப்யூரியஸ் 7 (Furious 7) என்னும் திரைப்படத்தினை, சட்டத்திற்குப் புறம்பாக, சென்ற ஏப்ரல் வரை, இந்தியாவில் 5 லட்சத்து 78 ஆயிரம் பேர் தரவிறக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் உள்ளன.

இது போன்ற திருட்டுத்தனமான தரவிறக்கச் செயல்களுக்குத் துணை போகும் Extratorrent.cc என்னும் இணைய தளம், இந்தியாவில் மிகவும் பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளன. பலரும் இதனைப் பயன்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

துரதிருஷ்டவசமாக, இந்த இணைய தளம் உக்ரைன் நாட்டில் உள்ள சர்வரில் இயங்குகிறது. இந்த தளத்தில், 14 லட்சம் திருட்டு பைல்கள், திருடப்படுவதற்கென்றே உள்ளன. ஒவ்வொரு மாதமும், ஆயிரம் கோடி பேர் இதிலிருந்து பைல்களைத் திருட்டுத்தனமாகப் பைல்களைத் தரவிறக்கம் செய்கின்றனர்.

இது போன்ற இணையத் திருட்டுக்களை ஒடுக்க மிகக் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போது தான் இணையப் பயனாளர்கள் உயர்ந்து வரும் பொழுது, மோசமான விளைவுகள் ஏற்படாமல் இருக்கும். இதனையே அமெரிக்க அரசு விரும்புகிறது.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes