மின் அஞ்சல் அனுப்ப குறிப்புகள்

எத்தனையோ ஆண்டுகளாக மின் அஞ்சல் பயன்படுத்தி வருகிறோம். இதில் என்ன புதுமையான பயன் தரும் குறிப்புகள் இருக்கப் போகின்றன? என்று எண்ணுகிறீர்களா? 

சிலர் மின் அஞ்சல் பயன்படுத்தும் வழிகளைக் கவனித்த பின்னர், கீழ்க்காணும் குறிப்புகளைத் தர முன் வந்தோம். அவற்றைப் பார்ப்போமா!


1. மின் அஞ்சல் முகவரிகளில் எழுத்து வகைகள்: 

மின் அஞ்சல் முகவரிகளைப் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களிலேயே (Lower case letters) அமைத்திருப்பார்கள். ஒரு சிலர், ஒன்றிரண்டு கேப்பிடல் எழுத்துக்களையும் இணைத்திருப்பார்கள். 

அவர்களுக்கான மின் அஞ்சல் முகவரியினை அமைக்கும்போது, நாம் இந்த வேறுபாடு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. எடுத்துக் காட்டாக, aarunraj@gmail.com என்பதுவும், Aarunraj@gmail.com என்பதுவும் ஒன்றாகவே கருதப்படும். முகவரியை எப்படி அமைத்தாலும், மெயில் சென்றடைந்துவிடும்.


2. பெரிய எழுத்துக்களில் அமைக்க வேண்டாம்: 

ஒரு சிலர் தங்களின் மெயில் செய்தி முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், மெசேஜ் முழுவதும் கேபிடல் எழுத்துகளில் அமைப்பார்கள். இது அடுத்தவரிடம் ஒழுக்கமற்ற முறையில் உரக்கப் பேசுவதற்கு ஒப்பாகும். 


3. சப்ஜெக்ட் இடத்தில் முழு மெயில்: 

ஒரு சிலர், சிறியதாகத் தானே உள்ளது என் செய்தி என்ற எண்ணத்தில், சப்ஜெக்ட் கட்டத்தில் முழு இமெயில் செய்தியையும் அமைப்பார்கள். இது அனுப்புபவருக்கும், பெறுபவருக்கும் சிக்கலைத் தரும். 

பின் நாளில் வேறு செய்திகளை சப்ஜெக்ட் கட்டத்தில் உள்ள டெக்ஸ்ட் அடிப்படையில் தேடுகையில் பிரச்னையை உண்டாக்கும்.


4. அனுப்புவர் இடத்தில் உங்கள் பெயர்: 

மின் அஞ்சல் அனுப்புகையில் From கட்டத்தில் உங்கள் பெயர் எப்படி அமைகிறது என்பதனைக் கவனிக்கவும். இந்த பெயரில் தான், நீங்கள், உங்கள் செய்தியைப் பெறுபவருக்கு அறிமுகமாகிறீர்கள். 

பெறுபவரின் இன்பாக்ஸில் இந்த பெயர் தான் காட்டப்படும். எனவே, சற்று மாறுதலாக இருந்தால் மாற்றி, உங்களை அடையாளம் காணும் வகையில் அமைக்கவும். இல்லை என்றால், உங்களுக்கு பதில் அனுப்புவதற்குப் பதிலாக, இன்னொருவருக்கு பதில் செல்லலாம்.


5. ரிப்ளை ஆல் பட்டன் வேண்டாமே!: 

அஞ்சலுக்கு பதில் அனுப்புகையில், Reply All அழுத்தி பதில் அனுப்புவதைத் தவிர்க்கவும். குறிப்பாக வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்புகையில், இந்த பழக்கத்தைக் கட்டாயம் தவிர்க்கவும். 

ஏனென்றால், இது தேவையற்ற ஒன்றாகும். ஏற்கனவே, நிறைய எண்ணிக்கையில், அஞ்சல்களைப் பெறுபவர்கள், இப்படியும் தேவையற்ற மெயில்களைப் பெறுகையில் எரிச்சல் படலாம். மேலும், அஞ்சல் செய்திகளில், கிரெடிட் கார்ட் எண், சில யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகியவை இருக்கலாம். 

இவை தேவையில்லாமல் அடுத்தவருக்கு அறிவிக்கப்பட வேண்டாமே. மேலும், மின் அஞ்சல் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. எனவே, யாரும் இதனை ஹேக் செய்திட வாய்ப்பு உண்டு. எனவே, அனைவருக்கும் பதில் அனுப்புவதனை பின்பற்றவே வேண்டாம்.


6. ரகசிய செய்தி, தகவல் வேண்டாம்: 

எந்த நிலையிலும், ரகசிய தகவல்கள் மற்றும் செய்திகளை அனுப்ப மின் அஞ்சல்களைப் பயன்படுத்த வேண்டாம். மேலே குறிப்பிடப்பட்டிருப்பது போல, இவை திருடு போகும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இவற்றை வேறு வழிகளில் தெரியப்படுத்துவதே நல்லது.


7. ஸ்பெல் செக்: 

மின் அஞ்சல் அமைத்தவுடன், அதனை ஸ்பெல் செக் செய்தல் நல்லது. அப்போதுதான் எழுத்துப் பிழைகள் இல்லாமல் அஞ்சல் செல்லும். பெரும்பாலான இமெயில் கிளையண்ட் புரோகிராம்களில், வேர்ட் புரோகிராமில் உள்ளது போல, சொற்களின் எழுத்துப் பிழை, அந்தச் சொற்களை அமைக்கும்போதே காட்டப்படும். 

அப்போதே திருத்தி அமைக்க வேண்டும். வழக்கம்போல, அதில் ரைட் கிளிக் செய்தால், கிடைக்கும் சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம். இல்லை என்றாலும், தவறுகள் உள்ளனவா என்று ஒருமுறைக்கு இருமுறை சொற்களைக் காண்பது நல்லது. 

இருப்பின் திருத்திய பின்னரே அனுப்ப வேண்டும். அப்போதுதான், அனுப்புபவரைப் பற்றிய தவறான கருத்து உருவாகாது.


வாட்ஸ் அப் - உங்கள் செய்தி படிக்கப்பட்டதா?

அதிக எண்ணிக்கையில் மக்களால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டண்ட் மெசஞ்சராக வாட்ஸ் அப் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது அனைவரும் அறிந்ததே. 

வாட்ஸ் அப் தற்போது புதிய வசதி ஒன்றை அதன் பயனாளர்களுக்கு அளிக்கிறது. இதில் செய்தியை அனுப்பியவுடன், செய்தி அனுப்பப்பட்டது, நம் செய்தியை அடுத்து கிரே கலரில் ஒரு டிக் மூலம் காட்டப்படும். 

அனுப்பியவரின் ஸ்மார்ட் போனை அடைந்தவுடன், அதில் இரண்டு டிக் அடையாளங்கள் காட்டப்படும்.

தற்போது, செய்தியை அவர் படித்தவுடன், இந்த இரண்டு டிக் அடையாளங்களும் நீல நிறத்தில் மாறும். 

இதன் மூலம், நீங்கள் செய்தி அனுப்பும் நபர், உங்கள் மீதும் நீங்கள் அனுப்பும் செய்தி மீதும் அக்கறை உள்ளவரா என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

ஏற்கனவே பலர், இரண்டு டிக் மார்க் இருந்தாலே, யாருக்காக மெசேஜ் அனுப்பப்பட்டதோ, அவர் அதனைப் படித்துவிட்டார் என்று எண்ணி வந்தனர். இது தவறு என்று வாட்ஸ் அப் தன் வலைமனையில் தெரிவித்துள்ளது. 

மெசேஜ் பெறுபவரின் போனைச் சென்று அடைந்ததனைத் தான் இது குறிக்கிறது. எனவே தான், அவர் படித்துவிட்டார் என்பதனை, இந்த இரு டிக் அடையாளங்களும் நீலக் கலரில் மாறுவதன் மூலம் காட்டப்படுகிறது.


வாட்ஸ் அப் மெசஞ்சர் புதிய பரிமாணங்கள்

மொபைல் போன்களில், எஸ்.எம்.எஸ். தவிர்க்க திட்டமிடுபவர்களுக்கு, இலவசமாய் கை கொடுக்கும் டூல், வாட்ஸ் அப் ஆகும். 

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இயங்கும் இந்த அப்ளிகேஷன், எண்ணற்ற மெசேஜ்களை உலகெங்கும் அனுப்ப உதவுகிறது. 

மொபைல் எஸ்.எம்.எஸ். குழப்பங்களுக்கு நடுவே, மிகச் சிறந்த பயனுள்ள அப்ளிகேஷனாக இது கையாளப்படுகிறது.

நமக்கு மொபைல் சேவையினை வழங்கும் நிறுவனங்களின் எல்லைகள் தாண்டப்படுகையில், குறிப்பாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு, செய்திகளை, அதுவும் இலவசமாக அனுப்ப பயன்படுவது வாட்ஸ் அப் தான். இதன் கூடுதல் பரிமாணங்கள் குறித்து இங்கு காணலாம்.

முதலில் இதன் பயனாளர்கள் எண்ணிக்கை நம்மை அசத்துகிறது. உலகெங்கும் ஏறத்தாழ 40 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த அளவு எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் எண்ணிக்கை தான், பேஸ்புக் இதனை மிகப் பெரிய அளவில் பணம் கொடுத்து வாங்கச் செய்தது.


எஸ்.எம்.எஸ். பயன்பாட்டிற்குப் பதிலாக

வாட்ஸ் அப் தந்திடும் வசதிகளில், வழக்கமான பாரம்பரிய மெசேஜிங் பணிகளில் ஒரு புதிய திருப்புமுனையைக் கொண்டு வந்தது சிறப்பாகும். செய்தி அனுப்புவதுடன், கூகுள் மேப்பில் உங்கள் இடத்தைக் காட்டலாம்; படத்தை இணைக்கலாம்; 

இரண்டு நிமிடங்கள் இயங்கும் விடியோவினை இணைத்து அனுப்பலாம்; சாதனத்தின் சேவ் செய்திடும் வசதியைப் பொறுத்து ஆடியோ பைல்களை அனுப்பலாம். 

கூடுதலாக புதிய தொடர்பு குறித்த தகவல்களை இணைக்கலாம். ஆப்பிள் நிறுவன சாதனங்களைப் பயன்படுத்தி வந்தவர்கள், அதில் உள்ள எமோட்டிகான்கள் இதில் இணைக்கப்பட்டிருப்பதனை நிச்சயம் வரவேற்பார்கள். ஆண்ட்ராய்ட் எமோட்டிகான்கள் இதில் இல்லை. 

நாம் சேட் செய்திடும் பின்னணியை நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். இன்ஸ்டண்ட் மெசேஜ் போன்ற நிலையையும் உருவாக்கலாம். சில மொபைல் போன்களில், இதன் போன் அலர்ட் எல்.இ.டி. நிறத்தை மாற்றும் வசதியும் தரப்பட்டுள்ளது. 

எது எப்படி இருந்தாலும், வாட்ஸ் அப், தான் தந்து கொண்டிருக்கும் வசதிகளை செவ்வனே மேற்கொள்கிறது என்பது உண்மை. 

மற்ற அப்ளிகேஷன்களான, ஸ்கைப் மற்றும் கூகுள் ஹேங் அவுட், விடியோ சேட்டிங் எனப்படும் காட்சி வழி உரையாடல் வசதி, வாட்ஸ் அப்பில் இல்லை என்றாலும், வாட்ஸ் அப் அதன் எல்லைக்குள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு, தன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் பெற்றுள்ளது. 

வாட்ஸ் அப் விரைவில் வாய்ஸ் அழைப்பினை இணைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப், 3ஜி அல்லது வை பி இணைப்பில் மிகத் திறமையுடன் செயல்படுகிறது. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். சிம்பியன், பிளாக்பெரி மற்றும் விண்டோஸ் போன் சிஸ்டங்களில் செயல்படும் மொபைல்போன்களில் இயங்குகிறது. 

வைபர் (Viber) போல, வாட்ஸ் அப் பெர்சனல் கம்ப்யூட்டரில் இயங்குவதில்லை. டேப்ளட் பி.சிக்களிலும் இது இயங்காது.


பேஸ்புக் - தொல்லை தரும் நண்பர்களைக் கட்டுப்படுத்த

பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும். 

நான் என்னதான் நம் நண்பர்களை எடைபோட்டு தேர்ந்தெடுத்தாலும், ஒரு சிலர் தங்களுடைய செய்திப் பதிவுகள் (news feed) மூலம் நம்மை எரிச்சல் அடைய வைப்பார்கள். 

இவர்களிடமிருந்து நாம் ஆர்வம் காட்டாத செய்திப் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கப் பெறுவோம். இதனால் எரிச்சல் அடைவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பதிவுகளை நிறுத்த முடியாமல் தவிப்போம்.

பேஸ்புக் தளம் தற்போது இதற்கு ஒரு தீர்வினைத் தந்துள்ளது. இந்தப் பிரிவில், உங்களுடைய செய்திப் பதிவு பக்கத்தில், கடந்த வாரத்தில் அதிகம் பதிவுகளைத் தந்த நண்பர்கள், பக்கங்கள் மற்றும் குழுக்கள் பட்டியலிடப்படும். 

இதில் யாரிடமிருந்து இத்தகைய பதிவுகளை நிறுத்த வேண்டுமோ, அவர்கள் பெயர் முன் ஒரு டிக் கிளிக் செய்து, அவர்கள் நம்மைப் பின் தொடர்ந்து வந்து செய்திப் பதிவுகளை இடுவதனை நிறுத்தலாம். 

இதனை நிறுத்திய பின்னரும், அவர்களுடன் தொடர்ந்து நீங்கள் நட்பாக இருக்கலாம். ஆனால், அவர்களிடமிருந்து நம்மை எரிச்சலடையச் செய்திடும் பதிவுகள், நிலைப்பாடுகள் நமக்கு வராது.

இதே பட்டியலில், கடந்த காலத்தில் நம்மைப் பின்பற்றி பதிவுகள் இடாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் பெயர்களையும் காணலாம். நீங்கள் முடிவெடுக்கும் எந்த நேரத்திலும், இவர்களுக்கு உங்களைப் பின்பற்ற அனுமதி அளிக்கலாம்.

இந்த News feed settings பிரிவு மொபைல் சாதனங்களிலும், நம் டெஸ்க்டாப்பிலும் இப்போது கிடைக்கிறது. இதனைப் பெற "more" மெனு கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில், கீழாகச் செல்லவும். அங்கு "help & settings" என்ற பிரிவில், நீங்கள் இந்த வசதியினைப் பெறலாம்.

இதற்கிடையே, இன்னொரு வேலையையும் நீங்கள் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட விரும்பத்தகாத நபரிடமிருந்து வரும் தகவல்களை மறைத்து வைக்கலாம். 

அந்த பதிவில், வலது மேல் மூலையில் உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், hide என்பதை அழுத்தி, தகவலை மறைக்கலாம். 

இவ்வாறு மறைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நபரிடமிருந்து வரும் தகவல் பதிவுகள் மறைக்கப்படும் மற்றும் குறைக்கப்படும்.

“ஒரு நண்பர் நம்மைப் பின் தொடர அனுமதி அளிப்பதுவும், அனுமதியை நிறுத்துவதும் இனி உங்கள் கைகளில் உள்ளது” என்று இது குறித்து பேஸ்புக் நிர்வாகி க்ரெய்க் மர்ரா தன் வலைப்பதிவில் (http://newsroom.fb.com/news/2014/11/news-feed-fyi-more-ways-to-control-what-you-see-in-your-news-feed/) தெரிவித்துள்ளார். 

இந்த செட்டிங்ஸ் இயக்குவது பற்றிய காணொளி விளக்கக் காட்சியையும் காணலாம். 

அண்மையில் இன்னொரு சமூக இணைய தளமான, ட்விட்டர் தளத்தில், இதே போன்ற தகவல்களை மறைக்கும் வசதி தரப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேஸ்புக் தளமும் இந்த வசதியைத் தந்துள்ளது.


மைக்ரோசாப்ட் லூமியா 535 மற்றும் டூயல் சிம் 535

மைக்ரோசாப்ட் லூமியா என்னும் பெயரில் முதல் ஸ்மார்ட்போன் வெளியாகிறது. லூமியா 535 மற்றும் லூமியா 535 டூயல் சிம் எனப் பெயர் கொண்டுள்ளன. 

இவற்றின் திரை 5 அங்குல அளவில் qHD டிஸ்பிளேயுடன் உள்ளன. இதற்கு கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதில் குவாட்கோர் ஸ்நாப் ட்ரேகன் 200 ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. 

விண்டோஸ் போன் 8.1 லூமியா டெனிம் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம். எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த ஆட்டோ போகஸ் கேமரா 5 எம்.பி. திறனுடன் உள்ளது. முன்புறமாக அதே 5 எம்.பி. திறனுடன் வைட் ஆங்கிள் லென்ஸ் இணைந்து கிடைக்கிறது.

இதனுடன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிந்தே தரப்படுகிறது. இதன் ராம் மெமரி 1ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 128 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். 

டூயல் சிம் போனில் மட்டும் இரண்டு சிம்களை இயக்கலாம். இவற்றின் பரிமாணம் 140.2×72.4×8.8 மிமீ. இதன் எடை 146 கிராம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. 

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1905 mAh திறன் கொண்டது.

ஆறு வண்ணங்களில் இந்த போன்கள் வெளியாகின்றன. முதலில் இவை சீனா, ஹாங்காங் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் அறிமுகமாகின்றன. 

இந்தியாவில் விரைவில் வெளிவரும் என இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 9,000 என்ற அளவில் இருக்கலாம்.


கம்ப்யூட்டரைக் கொல்லும் எபோலா வைரஸ்

உலக அளவில், உயிர்க் கொல்லி நோயைப் பரப்பும் எபோலா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும், மக்களும் பயந்து கொண்டிருக்கின்றனர். 

இந்த வேளையில், கம்ப்யூட்டரை இது பாதித்து வருகிறது என்ற செய்தி வியப்பைத் தந்து கொண்டிருக்கிறது. 

உண்மை என்னவென்றால், எபோலா வைரஸ் குறித்து பல போலியான இமெயில்கள், உலகெங்கும் வலம் வருகின்றன. ”எபோலா பற்றி, உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையினைத் தந்துள்ளது. 

இதை அவசியம் படியுங்கள். மற்றவர்களுக்கும் பரப்புங்கள்” என்ற எச்சரிக்கை மெயில் ஒன்று வருகிறது. அறிக்கை குறித்துப் படிக்க லிங்க் ஒன்றும் தரப்படுகிறது. 

இந்த லிங்க்கில் கிளிக் செய்தால், உடன் மால்வேர் ஒன்று உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, கம்ப்யூட்டரின் இயக்க கட்டுப்பாட்டினை, அஞ்சல் வழியாக இன்னொருவருக்கு அனுப்புகிறது. 

உங்கள் கம்ப்யூட்டரின் பாஸ்வேர்ட், வங்கிக் கணக்கு எண், அதற்கான பாஸ்வேர்ட் எண், கிரெடிட் கார்டு எண் என அனைத்து தனி நபர் தகவல்களும் செல்கின்றன. இதனால், அனைத்து வழிகளிலும் இழப்பு ஏற்படுகிறது. 

எனவே, இத்தகைய மெயில் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தாலோ, அல்லது உங்கள் ஸ்மார்ட் போனில் இது போன்ற செய்தி வந்தாலோ, உடனே, அதனை ஆர்வத்தில் லிங்க்கில் கிளிக் செய்து திறந்து பார்க்காமல், அழித்துவிடுங்கள்.


விண்டோஸ் - எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்

கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. 

இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே.

சில குறிப்புகள் பெர்சனல் கம்ப்யூட்டருக்கானவையாக இருக்கலாம். சில விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8க்கானவையாக தரப்படுகின்றன.


போல்டர்கள் & பைல்களை அமைத்தல்

நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும் My Documents போல்டரிலேயே சேமித்து வைத்தால், நிச்சயம் பைல் ஒன்றைத் தேடிப் பெறுவது சிரமமாக இருக்கும். 

எனவே, அலுவலக பைல்கள், சொந்த தனிவாழ்க்கைக்கான பைல்கள், குடும்ப உறுப்பினர்களுக்கான பைல்கள் என பல போல்டர்களை அமைத்து, சேமித்து வைப்பது நல்லது. இவற்றில் துணை போல்டர்களையும் அமைத்து, பைல்களைப் பிரித்து அடுக்க வேண்டும். 


டெஸ்க்டாப் சுத்தம்

டெஸ்க்டாப்பில் ஐகான்களைப் பதிந்து வைப்பது, நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை, விரைவாக இயக்கிப் பயன்படுத்த முடியும் என்பதனால்தான். 

ஆனால், இதற்காக, அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் அவற்றிற்கான ஐகான்களை டெஸ்க்டாப்பில் வைத்தால், அந்த நோக்கமே கெட்டுவிடும். எனவே, அடிக்கடி தேவைப்படாதவற்றிற்கான ஐகான்களை நீக்கிவிடுவதே நல்லது. 

மேலும், தொடர்புள்ள ஐகான்களை ஒரு குழுவாகவும் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, Word, Excel and PowerPoint ஆகியவற்றிற்கான ஐகான்களை, டெஸ்க்டாப்பில் அருகருகே அமைத்தால், நாம் தேடி அலைய வேண்டியதில்லை.


போல்டர்களைப் பின் செய்திடுக

போல்டர்களை எளிதாக அடைவதற்கு அவற்றை டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கலாம். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து, போல்டர்களை அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் பின் செய்திடலாம். 

டாஸ்க் பாரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகானை ரைட் கிளிக் செய்தால், பின் செய்யப்பட்ட போல்டர் முதலில் காட்டப்படும். அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் போல்டர்களை மட்டும் இது போல பின் செய்திடவும். இல்லை எனில், இங்கும் கூட்டம் அதிகமாகி, நீங்கள் தேடிப் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.


ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்

மேலே, டெஸ்க்டாப்பில் அதிகமாகும் ஐகான்களை நீக்குவது குறித்து டிப்ஸ் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினையும் நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்தலாம். 

ஒரு டெஸ்க்டாப் விளையாட்டுகள், இன்னொன்று அப்ளிகேஷன்களில் உருவாக்கும் பைல்களுக்கு, இன்னொன்று பாடல், விடியோ காட்சிகளுக்கான அப்ளிகேஷன்கள் எனப் பிரித்து அமைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட டெக்ஸ்டாப் அமைக்க விண்டோஸ் 10 வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. 

தற்போதைக்கு Dexpot என்ற அப்ளிகேஷன் மூலம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8லும் இதனை அமைக்கலாம். இந்த அப்ளிகேஷனை http://download.cnet.com/Dexpot/3000-2346_4-10580780.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 


சிஸ்டத்துடன் இயங்கும் புரோகிராம்களை நீக்க

நம் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், பல ஸ்பேம் புரோகிராம்கள், நாம் அறியாமலேயே, நம் அனுமதியின்றியே இயங்கத் தொடங்கி, பின்னணியில் இயங்கியவாறே இருக்கின்றன. 

startup programs என இவை அழைக்கப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டர் இயக்கத்தின் செயல் வேகத்தினைக் குறைக்கின்றன. இவை இயங்குவது கூட நமக்குத் தெரியவில்லை. 

ஏனென்றால், நாம் புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அதனுடன் ஒட்டிக் கொண்டு இவை கம்ப்யூட்டரை அடைகின்றன. இவற்றை நீக்கினால், நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படுமோ என்று சிலர் தேவையற்ற பயம் கொண்டு, இவற்றுடனேயே செயல்படுகின்றனர். 

சிலரோ, இவற்றை எப்படி நீக்குவது என்று அறியாமல் உள்ளனர். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இவற்றை எப்படி நீக்குவது எனக் காணலாம்.


1. சிஸ்டம் கான்பிகரேஷன் டூல் (System Configuration Tool): 

விண்டோஸ் கீ + R அழுத்தினால், ரன் விண்டோ கிடைக்கும். இதில் msconfig என டைப் செய்து எண்டர் அழுத்தினால், சிஸ்டம் கான்பிகரேஷன் என்னும் விண்டோ கிடைக்கும். 

இதன் மூலம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதை வரையறை செய்து அமைக்கலாம். இதில் உள்ள Startup டேப் அழுத்தினால், விண்டோஸ் இயக்கம், இயங்கத் தொடங்குகையில், இயங்கத் தொடங்கும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். 

இதில் Start Menu's Startup போல்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கும். இதனைத்தான் நாம் சற்று சீரமைக்க வேண்டியுள்ளது. ஆனால், அதற்கும் முன், இந்த பட்டியலில் இருக்கும் நம் கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான புரோகிராம்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். 

எடுத்துக் காட்டாக, நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கட்டாயம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.


2. தேவையற்ற அப்ளிகேஷன்களை முடக்குக: 

மேலே சொன்ன பட்டியலை முழுமையாக ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கவும். பின்னர், நமக்குத் தேவை இல்லாத புரோகிராம்கள் என உறுதி செய்யக் கூடியவற்றை நீக்கவும். இதற்கு, இந்த புரோகிராம் முன் உள்ள செக் பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்தால், அந்த டிக் அடையாளம் நீக்கப்படும். 

இனி, அந்த புரோகிராம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்காது. இதனைச் செய்து முடித்தவுடன், ஓகே கிளிக் செய்திடவும். உடன், சிறிய விண்டோ ஒன்று காட்டப்பட்டு, கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவா அல்லது பின்னர் செய்திடலாமா என்று கேள்வி கேட்டு ஒரு விண்டோ கிடைக்கும். 

உங்கள் வசதிப்படி, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடலாம்; அல்லது, அந்த வேலையைப் பின் நாளில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு Restart மற்றும் 'Exit without restart' என்ற ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். உங்கள் முடிவுக்கேற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம்.


ஜிமெயில் மூடப்படும் இன்பாக்ஸ் இடம் பிடிக்கும்

இந்த தலைப்பைப் படித்துவிட்டு, பலர் மனம் பதைபதைக்கலாம். ஜிமெயில் தளத்தில் தங்களின் முக்கிய டாகுமெண்ட்களை, ரகசியக் கடிதங்களைப் பலர் ஸ்டோர் செய்து வைத்துள்ளனர். 

பலருடன் மேற்கொண்ட தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தொடர்புகளுக்கான சாட்சியங்கள், ஜிமெயில் தளத்தில் தான் உள்ளன. எனவே, ஜிமெயில் மூடப்பட்டால், இவர்கள் கதி என்னவாகும்? திடீரென அனைத்தும் இருண்டுவிடாதா? 

எனவே, ஜிமெயிலாவது மூடப்படுவதாவது? என்று தங்கள் மனதைத் தேற்றிக் கொள்பவர்களும் உண்டு. 

ஆனால், கணினி தொழில் நுட்பத்தில் இயங்கும் வல்லுநர்கள், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக, ஒரு நாளில், முன்னமே அறிவிக்கப்பட்டு, கால அவகாசம் தரப்பட்டு, பதிலியாக வேறு ஒன்று வழங்கப்பட்டு, ஜிமெயில் மூடப்படும்; 

அதன் தளங்களைத் தாங்கி இருக்கும் சர்வர்கள் வேறு பணிக்குத் திருப்பப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முடிவிற்கு வருவதற்கான காரணங்களை இங்கு காணலாம்.

1. ஜிமெயில் அதனைப் பயன்படுத்துபவர்களின் கைகளில், அவர்களுக்காகவே இயங்கி வரும் ஒரு பெரிய சாப்ட்வேர் அப்ளிகேஷனாகும். இதனை வடிவமைத்து இயக்கும், கூகுள் நிறுவனத்திற்கு இதனால், எந்த பிரதிபலுனும் இல்லை. டேட்டா வடிவில் கூட பயன் எதுவும் இல்லை. 

இதிலிருந்து எந்தவிதமான டிஜிட்டல் பயன்களை கூகுள் பெறுவதில்லை. எனவே, நாம் விரும்பினாலும், இல்லை என்றாலும், கூகுள் நிறுவனத்திற்கு இது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், ஜிமெயில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒன்றுதான்.

2. மின் அஞ்சல் என்னும் இமெயில் உருவாக்கப்பட்டது எதற்காக? தேவையற்றவற்றைப் போட்டு வைக்கும் இடமாகத்தான் இது உருவானது. இதனை மொபைல் சாதன டிஜிட்டல் உலகில், ஆங்கிலத்தில், "dumb pipe" எனக் கூறுவார்கள். 

பல சர்வர்கள், இதனைப் பயன்படுத்துபவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய தகவல்களை பிட்களில் அமைத்துப் பரிமாறிக் கொள்ளவே இயங்குகின்றன; மின் அஞ்சல் டூல் எந்த உருப்படியான புதியதாக ஒன்றைத் தானாக வழங்க முடியாது. 

இதனைப் பயன்படுத்துபவர் பார்க்கின்ற விஷயங்களுக்கும், பார்க்காத விஷயங்களுக்கும் இடையே ஒரு வாயில் காவலனாகக் கூட இமெயில் செயல்படுவதில்லை.

3. மின் அஞ்சல் சேவை வழங்குபவர்கள், இது போல குப்பைகளைத் தாங்கும் குழாய்களாக, தங்கள் சேவை சாதனங்கள் அமைவதை விரும்பவில்லை. 

ஏனென்றால், அதில் எதுவும் லாபம் ஈட்ட முடியாதே. இந்த இமெயில் குப்பை இடத்திற்கென தனி செயல் அடையாளம் இல்லை. இதனை இது கொடுக்கும் நம்பகத்தன்மை மற்றும் வேகமான செயல்திறன் கொண்டே பயனாளர்கள் மதிப்பிடுகின்றனர். 


ஸ்மார்ட்போனில் இந்திக்கென கூகுள் கூட்டு ஒப்பந்தம்

கூகுள் நிறுவனம் தான் வடிவமைத்துள்ள இந்தி மொழிக்கான கீ போர்டினை, இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் பதிவு செய்து தர, ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

இதன் மூலம், ஸ்மார்ட் போன்களில், அவற்றைப் பயன்படுத்துபவர் இந்தி மொழியில் தங்களுடைய மின் அஞ்சல்களை எளிதாகவும் விரைவாகவும் தயார் செய்திட முடியும். 

தாங்கள் மற்றவருக்குத் தெரிவிக்க விரும்பும் செய்திகளையும் டைப் செய்திட முடியும். இப்போது புழக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட் போன்களிலும், சிஸ்டம் அப்டேட் மூலம், இந்த கீ போர்ட் இன்ஸ்டால் செய்திடவும், கூகுள் திட்டமிடுகிறது. 

தற்போது பல மொபைல் போன்களில் இந்தி மொழி சப்போர்ட் தரப்பட்டாலும், பயனாளர், இந்தி மொழியில் தான் விரும்பும் தகவலை டெக்ஸ்ட்டாக அமைப்பதில் சிரமம் கொள்கின்றனர். சுற்றி வளைத்து, பல வழிகளை இதற்கென கையாள வேண்டியுள்ளது. இதனால், இந்தி மொழியில் டெக்ஸ்ட் தருவதனைத் தவிர்த்து விடுகின்றனர்.

இந்தியாவில் இயங்கும் 92 கோடியே 40 லட்சம் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், அடிப்படை வசதிகள் கொண்ட போன்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதனாலும், இணைய இணைப்பில் தகவல்களைப் பெறவும், ஸ்மார்ட் போன்களுக்கு மாறிவருகின்றனர். 

இது போன்ற மாநில மொழிகளுக்கான கீ போர்டுகள், ஸ்மார்ட் போனுக்கு மாறும் பழக்கத்தினை அதிகப்படுத்தும் எனவும் கூகுள் எண்ணுகிறது. தமிழைப் பொறுத்தவரை, ஸ்மார்ட் போன்களில், தமிழ் பயன்படுத்த ”செல்லினம்” என்ற சாப்ட்வேர் அப்ளிகேஷன் இலவசமாக கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. டெக்ஸ்ட் அமைப்பதில் முன்கூட்டியே சொற்களைக் காட்டும் வசதி உட்பட பல வசதிகள் இதில் உள்ளன.

இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால், ஆங்கிலம், தமிழ் மொழிகளை மிக எளிதாகக் கையாளலாம். தமிழில் டைப் செய்திட தமிழ்நெட் 99 மற்றும் அஞ்சல் கீ போர்ட்கள் தரப்படுகின்றன. 

திரையில் காட்டப்படும் கீ போர்ட் மூலம் மிக எளிதாக டைப் செய்திடலாம். ஆப்பிள் நிறு வனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே, ஐ.ஓ.எஸ்.7 முதல் தமிழ் மொழிக்கான சப்போர்ட் வழங்கி வருகிறது. தனியே அப்ளிகேஷன் சாப்ட்வேர் தேவையில்லை.


விண்டோஸ், ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் மொபைஜெனி

விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் இரு வகையாக ''மொபைஜெனி'' என்னும் பயனுள்ள சாப்ட்வேர் அப்ளிகேஷன் தரப்படுகிறது. 

இந்த அப்ளிகேஷன் புரோகிராம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம் ஆக இருக்குமோ என்று பலர் சந்தேகப்படுகின்றனர். இரு வகை சிஸ்டங்களில் இயங்கும் வகையில் தரப்படுவதால், அவ்வாறான தன்மை கொண்டதாக இருக்காது 

எனப் பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்ட் இயங்கும் மொபைல் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். இதன் பயன்களும் அதிகம். இது குறித்து இங்கு பார்க்கலாம்.


1. மொபைல் போன் / டேப்ளட் பி.சி. கம்ப்யூட்டருடன் இணைப்பு: மொபைஜெனி சாப்ட்வேர் அப்ளிகேஷனின் முக்கிய செயல்பாடு, பெர்சனல் கம்ப்யூட்டருடன் டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போனை இணைத்து, பைல்களை நிர்வகிக்கும் பணியை மேற்கொள்வதுதான். 

இதனை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கியவுடன், அந்த கம்ப்யூட்டருடன் ஏதேனும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன் அல்லது டேப்ள்ட பி.சி. யை உடன் அடையாளம் கண்டு கொள்கிறது. உடன், படங்கள், வீடியோ படங்கள், இசை கோப்புகள் ஆகியவற்றை இரண்டிற்கும் இடையே பரிமாறிக் கொள்ள உதவுகிறது. அத்துடன் நாம் சேவ் செய்து வைத்திருக்கும் டேட்டாவிற்கான முழுமையான பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளவும் செய்கிறது. 


2. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் மொபைல் போனுக்கான சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து, பின்னர், உங்கள் போனுக்கு அல்லது டேப்ளட் பி.சி.க்களுக்கு மாற்றிக் கொள்ளலாம். 


3. உங்களுடய போனில் நூற்றுக்கணக்கான தொடர்பு முகவரிகள், போன் எண்கள் உள்ளனவா? உங்களால், அவற்றைப் பராமரிக்க முடியவில்லையா? இந்த சாப்ட்வேர் மூலம், அவற்றை வரிசைப்படுத்தலாம், எடிட் செய்திடலாம், நீக்கலாம்; புதியவற்றை இணைக்கலாம்.


4. உங்களுடைய கம்ப்யூட்டருடன் மொபைல் போனை இணைத்துவிட்டால், அதில் வந்து சேர்ந்திருக்கும் மெசேஜ்களை, பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்தவாறே படிக்கலாம், நீக்கலாம்.

இவ்வாறு பலவகைகளில், கம்ப்யூட்டருக்கும் மொபைல் போனுக்கும், டேப்ளட் பி.சி.க்கும் இடையே ஒரு பைல் மேனேஜராக இந்த மொபைஜெனி (Mobogenie) செயல்படுகிறது. 

இருப்பினும் ஏன் இதனை மால்வேர் எனப் பலர் சந்தேகப்படுகின்றனர். முதல் காரணம், இது நம் மொபைல் போனில் உள்ள நம் பெர்சனல் தகவல்களை எடுத்துப் பயன்படுத்துவது. 

இரண்டாவதாக, நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மொபைஜெனி இயங்கத் தொடங்கியவுடன், அதனை மால்வேர் என அறிவித்து, இயக்கவா? என்ற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறது. 

எனவே, இதன் மூலம் நீங்கள் பரிமாறிக் கொள்ளாத பைல் ஏதேனும் இருந்தால், அதனை நன்றாகச் சோதனை செய்து உடனே நீக்கிவிடவும்.இதனை இன்ஸ்டால் செய்திடுகையில் Custom installation என்ற வகையில் இன்ஸ்டால் செய்திடவும். 

கண்களை மூடிக் கொண்டு, நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என அடுத்து அடுத்து கிளிக் செய்திட வேண்டாம். மொத்தத்தில், இது நல்ல பயன்களைத் தந்தாலும், சற்று அச்சம் தரும் வகையில் செயல்படுகிறது என்பது உண்மையே. ஆனால், இது மால்வேர் என இன்னும் நிரூபிக்கப்படவில்லை.


வெளிவருகிறது மைக்ரோசாப்ட் லூமியா

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் பெயருடன் இணைந்த “மைக்ரோசாப்ட் லூமியா” மொபைல் போனை விரைவில் வடிவமைத்து வெளியிட உள்ளது. 

அதே நேரத்தில், நோக்கியா என்னும் பெயரில், தொடக்க நிலை மற்றும் விலை மலிவான போன்களைத் தயாரித்து வழங்க உள்ளது.

சென்ற ஏப்ரல் மாதம், 700 கோடி டாலருக்கு மேல் கொடுத்து, நோக்கியாவை வாங்கிக் கொள்ளும் தன் ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் முடிவிற்குக் கொண்டு வந்தது. 

விலை மலிவான நோக்கியா பெயருடனான மொபைல் போன்கள் இனி விற்பனைக்கு வரும். 

தற்போது உள்ள நோக்கியா லூமியா போன்கள் விற்பனை செய்யப்பட்ட பின்னர், மைக்ரோசாப்ட் லூமியா என்ற பெயரில் போன்கள் வடிவமைக்கப்படும். 

மேற்கூறப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவன முடிவுகள், பேஸ்புக் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விற்பனைப் பிரிவின் தலைவர் டூலா ரைட்டிலா இவற்றைத் தெரிவித்துள்ளார்.


கூகுள் நெக்சஸ் 6 ஸ்மார்ட்போன்

சென்ற மாதம், ஆண்ட்ராய்ட் லாலிபாப் அறிமுகமானபோது, கூகுள் நெக்சஸ் 6 ஸ்மார்ட் போனையும் அறிமுகப்படுத்தியது. 

கூகுள் நிறுவனத்திற்காக, மோட்டாரோலா நிறுவனம் இதனை, அதனுடைய மோட்டாரோலா மோட்டோ எக்ஸ் கட்டமைப்பின் அடிப்படையில் தயாரித்துள்ளது. 

டிசம்பருக்குள், இந்தியா உட்பட 28 நாடுகளில் இது விற்பனைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

1440×2560 பிக்ஸெல்கள் அமைப்பு கொண்ட 5.96 அங்குல அளவிலான திரை; இதில் 16:9 AMOLED டிஸ்பிளே தரப்படுகிறது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. 

இதன் ப்ராசசர் 2.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் 805 ஆகும். இதன் ராம் மெமரி 3ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 மற்றும் 64 ஜி.பி. என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. 

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப். இதன் முன்பக்கமாக, இரு ஸ்பீக்கர்கள் இடம் பெறுகின்றன. இதில் தண்ணீர் உட்புகாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

dual LED Ring ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா இயங்குகிறது. இதன் வீடியோ பதிவு திறன் 4கே ஆக உள்ளது. முன்புறமாக, 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது.

இதன் தடிமன் 10.1 மிமீ. எடை 184 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி/எல்.டி.இ., 3ஜி, வை பி, புளுடூத் 4.0. ஜி.பி.எஸ். க்ளோநாஸ் மற்றும் என்.எப்.சி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

இதன் பேட்டரி 3,220 mAh திறன் கொண்டது. மேக வெண்மை மற்றும் நீல வண்ணம் என இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளியாகிறது. 

அமெரிக்காவில் மொபைல் சேவை திட்டத்துடன் இணைந்த விலை 649 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் போது, இங்கு விற்பனை விலை தரப்படும்.


கூகுள் தரும் புதிய இன்பாக்ஸ்

கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன. 

புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் மெயில்கள், வர்த்தக ரீதியான மெயில்களைப் புறந்தள்ளலாம். 

அது மட்டுமின்றி, நம் பயனுள்ள மெயில்களும், அவற்றின் மையத் தகவல்கள் கோடி காட்டப்படுவதால், நாம் விரைவாகப் பார்த்து செயல்பட வேண்டிய மெயில்களை, உடனடியாக இன்பாக்ஸ் மூலம் காண முடியும். இதன் மூலம், தகவல் தொழில் நுட்பத்தில், கிட்டத்தட்ட ஒரு குப்பைத் தொட்டியாக மாறிவிட்ட ஜிமெயிலைத் திருத்தி அமைக்கும் பணியில் கூகுள் இறங்கியுள்ளது. 

ஜிமெயில் பயன்படுத்தாதவர்களை, இக்காலத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் அனைவருமே ஜிமெயில் பயனாளர்களாக இருக்கிறோம். இருப்பினும் சில பிரச்னைகளை இதன் மூலம் நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். 

சில்லரை வர்த்தகர்களின் விளம்பர அஞ்சல்கள், ஸ்பாம் மெயில்கள், மால்வேர்களைத் தாங்கி வரும் மெயில்கள் போன்ற பல வேண்டத்தகாத, நாம் விரும்பாத அஞ்சல்கள் தொடர்ந்து நம் அஞ்சல் இன்பாக்ஸ் பெட்டியில் வந்து விழுகின்றன. 

இவற்றின் இடையேதான், நமக்கு முக்கியமான நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சல்களும் வருகின்றன. இதனால், சில வேளைகளில் நமக்குத் தேவையான அஞ்சல்கள நாம் கவனிக்கத் தவறுகிறோம். இந்த பிரச்னைகளைத் தீர்க்கவே, கூகுள் புதியதாக இன்பாக்ஸ் என்ற அப்ளிகேஷனைத் தருகிறது.

இன்பாக்ஸ் எனப் பெயரிடப்பட்டாலும், இது ஜிமெயிலின் இன்பாக்ஸ் வசதியை மட்டும் கொண்டிருக்காது. இதன் மூலம் நம் விமானப் பயணங்கள், நமக்கு வர வேண்டிய பொருட்கள், நினைவூட்டல்கள் என்பன போன்றவற்றையும் இதில் நிர்வாகம் செய்திடலாம். 

ஜிமெயிலை வடிவமைத்து பராமரிப்பவர்களே, இந்த இன்பாக்ஸ் அப்ளிகேஷனையும் வடிவமைத்துள்ளனர் என்றாலும், இது முற்றிலும் மாறுபட்ட கூடுதல் வசதிகளைத் தரும் வகையில், அதிகமான பணிகளை மேற்கொள்ளும் என கூகுள் நிறுவனத்தில் அண்மையில் உயர் பதவிக்கு உயர்த்தப்பட்ட சுந்தர் பிச்சை தன் வலைமனைப் பதிவில் தெரிவித்துள்ளார். 

புதிய இன்பாக்ஸ், ஜிமெயிலுக்கு மாற்றானது அல்ல. ஏற்கனவே நமக்குக் கிடைக்கும் இன்பாக்ஸினை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறது. ஜிமெயில் நமக்கு அறிமுகமாகி ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. 

நாம் பல வகைகளில், பரிமாணங்களில் நம் பணிக் கலாச்சாரத்தினை மாற்றி வளப்படுத்தியிருக்கிறோம். ஆனால், நம் வாழ்வோடு இணைந்த ஜிமெயில் மாற்றம் பெறாமல் இருந்து வருகிறது. அதற்கு வளமையான மாற்றம் தரும் ஒரு முயற்சி தான் இந்த இன்பாக்ஸ்.

”முன்பிருந்த காலத்தைக் காட்டிலும், இப்போது அதிகமான எண்ணிக்கையில் நம் அக்கவுண்ட் இன்பாக்ஸில் மெயில்கள் குவிகின்றன. நமக்கு வரும் முக்கிய அஞ்சல்களும், இந்த குப்பையில் மாட்டிக் கொள்கின்றன. 

இதனால், ஏற்படும் சிறிய இடைவெளிகளில், நமக்கு வரும் மிக முக்கிய அஞ்சல்கள் நழுவிப் போகலாம். குறிப்பாக, நாம் நம் மொபைல் போன்கள் வழி, அஞ்சல்களைப் பார்க்கையில், இந்த தவறுதல்கள் ஏற்படுகின்றன. 

இங்கு நமக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டதே புதிய இன்பாக்ஸ்” என கூகுள் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes