விநாடிக்கு பத்தாயிரம் ஜிபி டேட்டா அனுப்பும் ஷேடோ இன்டர்நெட்

அமெரிக்காவில், கூகுள் நிறுவனம், அங்குள்ள வீடுகளுக்கான இன்டர்நெட் இணைப்பில், விநாடிக்கு 10 கிகா பிட் டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தர முடியும் என்று இலக்கு வைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது. 

இது இன்றைய இணைய வேகத்தினைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகும். பலர் இது அறிவியல் கதைகளில் மட்டுமே இருக்கும் என எண்ணுகின்றனர். 

ஆனால், நாசா விண்வெளி மைய விஞ்ஞானிகளுக்கு இந்த வேகம் நத்தை வேகத்திற்கு இணையானதாகும். ஏனென்றால், அவர்கள், விநாடிக்கு பத்தாயிரம் கிகா பைட்ஸ் டேட்டா பரிமாற்றத்தைத் தரக்கூடிய ஷேடோ இன் டர்நெட் என்னும் அமைப்பை உருவாக்கி வருகின்றனர். 

பொதுமக்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் அமைப்பினை, நாசா பயன்படுத்துவதில்லை. ESnet (Energy Science Network) என்னும் ஷேடோ நெட்வொர்க் ஒன்றை இந்த மைய விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். 

தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட குழாய்கள் கட்டமைப்பில் இந்த டேட்டா பரிமாற்றம் நடைபெறுகிறது. தற்போது இவற்றின் மூலம் விநாடிக்கு 91 கிகா பிட்ஸ் டேட்டா பரிமாறப்படுகிறது. இதுதான், உலகிலேயே அதி வேக இணைய டேட்டா பரிமாற்றமாகும்.

நாசா இந்த வேக கட்டமைப்பினைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தரப்போவதில்லை. ESnet நெட்வொர்க்கினை அமெரிக்காவின் Department of Energy துறை இயக்கி வருகிறது. 

அவர்கள் மேற்கொண்டுள்ள திட்டங்களில், பெரும் அளவில் டேட்டா பரிமாற்றம் செய்திட வேண்டியுள்ளது. இவற்றை ஹார்ட் டிஸ்க் வழியாக மாற்றிக் கொள்வதில் ஏற்படும் நேர விரயத்தைத் தடுக்க, இந்த அதிவேக நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது. 

விஞ்ஞான ஆய்வுகள் நம் பூகோள அமைப்பினால் தாமதப்படக் கூடாது என்ற குறிக்கோளுடன் இந்த அதிவேக கட்டமைப்பு உருவாக்கப் பட்டதாகவும், இதன் வேகத்தினை அதிகரிக்க தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த துறை நிர்வாகி கிரிகோரி பெல் தெரிவித்துள்ளனர். 

பின்னொரு காலத்தில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.


யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல்

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் விஸ்டா பதிப்பிலிருந்து யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் என்னும் கட்டுப்பாட்டினை அமல்படுத்தியது. இது இப்போதும் விண்டோஸ் 7 மற்றும் 8ல் இயங்குகிறது. 

UAC எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த டூல், உங்களுடைய அனுமதியின்றி புரோகிராம்கள் இயங்குவதைக் கட்டுப்படுத்துகிறது. இதனுடன் ஒரு அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துவது லிமிடெட் யூசர் அக்கவுண்ட் போல அல்ல. 

அப்ளிகேஷன் புரோகிராம்கள் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்க அனுமதியைத் தானாகப் பெறுவதில்லை. முதலில் இயக்குபவரைத்தான் கேட்கும்.

யு.ஏ.சி. தீர்த்து வைக்கும் பிரச்னைகள்: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முதலில் ஒரு பிரச்னை கண்டறியப்பட்டது. பெரும்பாலானவர்கள், அவர்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்து செயல்பட, அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தினார்கள். 

அதாவது, ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராமும் முழு கம்ப்யூட்டரில் இயங்க, இயக்க, அட்மினிஸ்ட்ரேட்டரின் முழு அனுமதியினைப் பெற்றிருந்தன. 

இதனால், நீங்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் ஒன்றை, நீங்கள் அறியாமல், இயக்கிக் கொண்டிருந்தால், அது கம்ப்யூட்டரின் முழு பகுதியிலும் தன் கெடுதல் வேலையை மேற்கொள்ளும் வசதியினைப் பெற்றுவிடும். 

உங்கள் வெப் பிரவுசரோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் புரோகிராமோ இந்த கெடுதல் விளைவிக்கும் புரோகிராமுக்கு பணிந்துவிட்டால், முழு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

இதற்குப் பதிலாக சிலர் கட்டுப்படுத்தப்பட்ட யூசர் அக்கவுண்ட் (limited user accounts) பயன்படுத்துகின்றனர். ஆனால், பல புரோகிராம்கள் இந்த நிலையில் இயக்கப்படும்போது, இயங்குவதில்லை.


யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் இயங்கும் விதம்: 

விஸ்டா சிஸ்டம் முதல் யூசர் அக்கவுண்ட் கண்ட்ரோல் டூலினை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. அட்மினிஸ்ட்ரேட்டர் ஒருவர் விண்டோஸ் இயக்கத்தில் நுழைந்தவுடன், விண்டோஸ், explorer.exe பைலை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கான அனுமதியுடன் இயக்குகிறது. 

நீங்கள் திறக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் இந்த பைலால் தொடங்கப்படுகிறது. அந்த புரோகிராம்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட அனுமதியும் சேர்ந்து லோட் செய்யப்படும். இதனால், ஒரு புரோகிராம் இயங்க அட்மினிஸ்ட்ரேட்டரின் முழு அனுமதியை புரோகிராம் கேட்கலாம். 


லாவா நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை போன்கள்

லாவா நிறுவனம் தன் ஐரிஸ் வரிசையில் புதியதாக இரண்டு பட்ஜெட் விலை போன்களை வெளியிட்டுள்ளது. HomeShop18 என்ற வர்த்தக இணைய தளத்தில் இவை கிடைக்கின்றன. 

இவை Lava Iris 350M மற்றும் Iris 402e எனப் பெயரிடப்பட்டுள்ளன. 


Lava Iris 350M போனின் சிறப்பம்சங்கள்:

3.5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் HVGA டிஸ்பிளே திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், இரண்டு சிம் இயக்கம், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 2 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 10.2 மிமீ தடிமன், எடை 80 கிராம், நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத், 512 எம்.பி. ராம் நினைவகம், அதிகப்படுத்தும் வசதி கொண்ட ஸ்டோரேஜ் மெமரி மற்றும் 1200 mAh திறன் கொண்ட பேட்டரி. 


லாவா Iris 402e போனின் சிறப்பம்சங்கள்:

4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் HVGA டிஸ்பிளே திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், இரண்டு சிம் இயக்கம், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 3 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 10.35 மிமீ தடிமன், எடை 100 கிராம், நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத், 512 எம்.பி. ராம் நினைவகம், அதிகப்படுத்தும் வசதியுடன் கூடிய ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. மற்றும் 1400 mAh திறன் கொண்ட பேட்டரி.

Lava Iris 350M மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ.3,329. வர இருக்கும் Lava Iris 402e மொபைல் போன் விலை ரூ. 3,199.


மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ் (One Drive)

இலவசமாக இணைய வெளியில் நம் பைல்களைத் தேக்கி வைத்திட மைக்ரோசாப்ட் நிறுவனம் OneDrive வசதியை வழங்கியுள்ளது. 

இது எம்.எஸ். ஆபீஸ் பைல்களை மட்டும் சேவ் செய்திடத் தரப்பட்ட வசதி அல்ல. இதன் மூலம் நம் பைல்கள், நம் போட்டோக்கள் மற்றும் டாகுமெண்ட்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான உதவிக் குறிப்புகள் கீழே தரப்படுகின்றன. 


1. ஒன் ட்ரைவ் போல்டரை நகர்த்த: 

தற்போதைய விண்டோஸ் சிஸ்டத்தில் பைல்களை ஒருங்கிணைத்து சேவ் செய்திடலாம். நாம் உருவாக்கும் பைல்கள் நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நமக்கெனத் தரப்பட்ட க்ளவ்ட் ஸ்டோ ரேஜ் ஒன் ட்ரைவிலும் பதியப்படுகின்றன. 

நம் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டரில், இந்த பைல்கள் (synced files) பயனாளரின் ப்ரபைல் போல்டரில் ஒரு துணை போல்டரில் காட்டப்படுகின்றன. 

ஆனால், இந்த பைல்களை இன்னொரு போல்டரில் அல்லது இன்னொரு தனி ட்ரைவில் நாம் எடுத்துச் சென்று வைக்கலாம்.

விண்டோஸ் 8.1 இயக்கத்தில், ஒன் ட்ரைவுடன் இணைந்து பைல் சேமிக்கும் வசதி மாறா நிலையில் அமைக்கப்படுகிறது. பைல் எக்ஸ்ப்ளோரரில் ரைட் கிளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும். பின்னர் இங்கு கிடைக்கும் விண்டோவில் Location டேப் கிளிக் செய்து போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

விண்டோஸ் 7 இயக்கத்தில், இணையத்தில் Onedrive.com சென்று, இந்த ஒருங்கிணைந்த வசதியைப் பெறவும். இதற்கான செட் அப் செய்திடுகையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள லோக்கல் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். 

இதை ஏற்கனவே நீங்கள் அமைத்திருந்தால், சிஸ்டம் ட்ரைவில் உள்ள ஒன் ட்ரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Settings தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். 

அடுத்து Unlink OneDrive என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட பைல்கள் அனைத்தையும் புதிய போல்டர் ஒன்றுக்கு மாற்றவும். மீண்டும் செட் அப் இயக்கவும்.


2. டாகுமெண்ட் ஒன்றை இணையத்தில் இணைத்தல்: 

நம் டாகுமெண்ட் ஒன்றை, ஒன் ட்ரைவ் பயன்படுத்தி நாம் விரும்பும் வலைமனை அல்லது இணையப் பக்கத்தில் அமைக்கலாம். ஒன் ட்ரைவில் உள்ள டாகுமெண்ட், படம் அல்லது முழு போல்டரையும் எளிதாகப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். படங்களுக்கும், போல்டர்களுக்கும் அவற்றைப் பதிந்து வைக்கும் ஆப்ஷன் இங்கு தரப்படுகிறது. 

இதன் மூலம் நம் பைல்களுக்கு லிங்க் ஒன்றை வலைமனை அல்லது இணையப் பக்கத்தில் ஏற்படுத்தலாம். இதனை எப்படி ஏற்படுத்தலாம்? டாகுமெண்ட்டைத் திறக்க வேண்டாம். 

டாகுமெண்ட் உள்ள போல்டர் சென்று, அதனைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் மெனுவில் Embed என ஓர் ஆப்ஷன் இருப்பதைக் காணலாம். அதனைத் தேர்ந்தெடுத்தால், எச்.டி.எம்.எல். குறியீட்டினை உருவாக்க வழி காட்டப்படும். இதனை வலைமனை அல்லது இணையப்பக்கத்தில் இணைத்து வைக்கலாம்.


மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள்

மொபைல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள், நம் வாழ்வை, வர்த்தகத்தை புதிய பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன. எங்கு சென்றாலும் நம் தொழில் குறித்து பணி மேற்கொள்ள இவை உதவுகின்றன. 

இந்த அளவிற்கு நம்மை முன்னேற்றமடைய உதவும் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாம் பல பாதுகாப்பற்ற வழிகளைப் பின்பற்றுகிறோம். அவை எவை என்பதனையும், அவற்றிலிருந்து நம்மப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்திட வேண்டும் என்பதனையும் இங்கு காணலாம்.


1. சாதனத்தினை பூட்டி வைக்க மறத்தல்: 

நம் சாதனத்தை லாக் செய்தல் பெரிய அளவில் பாதுகாப்பினை வழங்கப் போவது இல்லை என்றாலும், அதுவே நம் பாதுகாப்பு கட்டமைப்பில் முதல் படியாகும். இந்த லாக் எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

தற்போது வந்துள்ள ஐபோன் 5ல் தரப்பட்டுள்ள விரல் ரேகை பூட்டு முதல், சாதாரணமாக பின் (PIN) எண் அல்லது பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டு போடும் முறை வரை இருக்கலாம். 

இதனுடன் கூட நம் போன் தொலைந்து போனாலும், ரிமோட் கட்டுப்பாடு முறையில் அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக அழித்திடும் வழிமுறைகளையும் பின்பற்றலாம்.


2. அப்டேட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்: 

நாம் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை நமக்கு வழங்கிய நிறுவனங்கள், அவற்றை மேம்படுத்துகையில், புதிய வசதிகள் தருவதோடு, அவற்றிற்கான பாதுகாப்பிற்கென புதிய வழிகளையும் அமைக்கின்றன. எனவே, அப்டேட் செய்திடவில்லை எனில், நம் அப்ளிகேஷன் புரோகிராம் மட்டுமின்றி, போனும் பாதுகாப்பற்ற நிலையை அடைகிறது.


3. அனுமதியற்ற சாதனத்தில் முக்கிய டேட்டா: 

அலுவலகப் பயன்பாட்டிற்கு எனத் தனியாகவும், சொந்த தொடர்புகளுக்கென தனியாகவும் என ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். 

சில வேளைகளில், அலுவலகம் சார்ந்த முக்கிய ரகசிய தகவல்களை நம் சொந்த மொபைல் சாதனங்களில் ஸ்டோர் செய்திடுகிறோம். இதனைத் தவிர்க்க வேண்டும். இரண்டு வகை டேட்டாவினையும் தனித்தனியே, வெவ்வேறு சாதனங்களில் ஸ்டோர் செய்வதே பாதுகாப்பானது.


ஸ்மார்ட் போன் திரை குழப்பமாக உள்ளதா?

உங்கள் ஸ்மார்ட் போன் திரையில் எக்கச்சக்க ஐகான்கள், எந்த வகையுமின்றி இடம் பிடித்து, ஒரே குழப்பமாக, குப்பைத் தொட்டி போல் காட்சி அளிக்கிறதா? 

இதற்கான தீர்வினை வைசர் சிம்பிள் லாஞ்ச்சர் (wiser simple launcher) என்ற டூல் தருகிறது. 

இதனை https://play. google.com/store/apps/details?id= com.wiser.home என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதனைப் பயன்படுத்தினால், முக்கியமான அப்ளிகேஷனுக்கான ஐகான்கள் உங்கள் போன்களின் திரையில், நடுவிலும், முன்பக்கமாகவும் இடம் பெற்றிருக்கும். 

அவை: Contacts, Dialer, Messaging, Camera, மற்றும் Gallery. இவற்றைப் பயன்படுத்துகையில், எளிதாக புரிந்து கொண்ட செயல்படுத்த பெரிய பட்டன்கள் தரப்படும்.


இணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., தன் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான வசதி ஒன்றை அளிக்கிறது. 

இந்நிறுவனத்தின் மொபைல் போன் இணைப்பு கொண்டிருப்பவர்கள், தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், பேஸ்புக் தளத்தைத் தொடர்பு கொள்ள முடியும் மூன்று நாட்களுக்கு ரூ.4, வாரத்திற்கு ரூ.10 மற்றும் மாதத்திற்கு ரூ.20 இதற்கென கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

இதற்கென, பி.எஸ்.என்.எல். U2opia Mobile என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

இந்த வசதி Unstructured Supplementary Service Data (USSD) என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தற்போது மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இது கிடைக்கிறது. 

USSD தொழில் நுட்பத்தினை, முன் கூட்டியே பணம் செலுத்தி, பதில் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தலாம். இடம் சார்ந்த தகவல் வசதிகளைப் பெறலாம். 

மெனு வழங்கி அதன் பிரிவுகளுக்கேற்ப வசதிகளைத் தரலாம். தற்போது தொலை தொடர்பு துறையில் இயங்கும் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, எச்சரிக்கை செய்திகளை அனுப்பப் பயன்படுத்தி வருகின்றனர். 

பி.எஸ்.என்.எல். ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தினால், இதன் வாடிக்கையாளர்கள், பேஸ்புக் தளத்தினை, தங்கள் அக்கவுண்ட்டில், இணைய இணைப்பு பெறாவிடினும் அணுக முடியும். 

மெசேஜ்களை அமைக்க, காண இயலும். நண்பர்கள் விடுத்துள்ள கேள்வி மற்றும் வேண்டுகோள்களுக்குப் பதில் அளிக்க முடியும். தங்கள் நண்பர்களின் பக்கங்களில் தகவல்கள, செய்திகளை எழுத முடியும். 

பிறந்த நாள் வாழ்த்து குறித்த தகவல்களைப் பெற்று, அதற்கேற்ப வாழ்த்துகளை அனுப்ப முடியும்.

இந்த வசதியினை வாடிக்கையாளர்களுக்கு முதல் முதலாக வழங்குவதன் மூலம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் என்று இந்நிறுவன இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சா தெரிவித்துள்ளார். 

தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க விரும்பும் பல கோடி மக்களுக்கு இந்த சேவையும் வசதியும் உண்மையிலேயே ஒரு பெரிய உதவி என்று யுடோபியா மொபைல் நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.


கூகுள் தரும் பொருளாதார முன்னேற்றம்

கூகுள் அப்ளிகேஷன்களை அன்றாட அலுவலகச் செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நல்ல பொருளாதார முன்னேற்றத் தினைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

Forrester Consulting என்னும் அமைப்பு, "The Total Economic Impact of Google Apps,” என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கணக்கெடுப்பினை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.

தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் இந்த நிறுவனங்கள் கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்திக் கொண்டன. 

இதனால் பல நன்மைகள் ஏற்பட்டதாகவும், அதன் மூலம் இந்நிறுவனங்களின் செயல்திறனும், வருமானமும் அதிகரித்ததாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முதலாவதாக, இந்நிறுவனங்களின் தகவல் தொழில் நுட்ப பரிமாற்றத்திற்கான செலவினங்கள் வெகுவாகக் குறைந்தன. இவற்றைப் பயன்படுத்திய பணியாளர்களின் செயல் திறன் மிக அதிகமாக உயர்ந்தது.

இந்நிறுவனங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த மின் அஞ்சல் வழிமுறைகள் மிகவும் பழையனவாகவும், வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதவையாகவும், தொடர்ந்து நிர்வகிக்க முடியாதவனவாகவும் இருந்தன. 

கூகுள் அப்ளிகேஷனுக்கு மாறியதன் மூலம் இவை அனைத்தும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தன. இதற்கான செலவுகள் கணிசமாகக் குறைந்தது. செயல்திறன் மூன்று பங்கு உயர்ந்ததனால், வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. 

இவற்றைப் பயன்படுத்த ஏற்பட்ட செலவினம் முதல் ஒராண்டிலேயே லாபத்தைக் காட்டியது. பின்னர் அடுத்த மூன்று ஆண்டுகளில், வருமானம் 329 சதவீதம் உயர்ந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றாக உள்ள இயக்க முறைமைகள்

பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் இயக்கமே பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் கையாளப்படுகிறது. சிலர் இதற்கு மாற்றாக வேறு சிஸ்டம் இல்லை என்று எண்ணிக் கொண்டுள்ளனர். 

பலர், லினக்ஸ் சிஸ்டம் மற்றுமே இதற்கு மாற்று என்று முடிவு செய்து, அதனைப் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு தானா? இந்த இரண்டினைத் தவிர வேறு எதுவும் இல்லையா? என்ற கேள்விக்கான பதிலை இங்கு பார்க்கலாம். பெர்சனல் கம்ப்யூட்டரை இயக்க உதவிடும் வேறு இயக்க முறைமைகள் இங்கு தரப்பட்டுள்ளன. 

இவை அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. தெரிந்து கொள்ளலாம். அல்லது விண்டோஸ் இருக்கும் கம்ப்யூட்டரிலேயே பாதுகாப்பான வழிகளில் பதிந்து இயக்கிப் பார்க்கலாம். இதற்கு விர்ச்சுவல் பாக்ஸ் அல்லது வி.எம். வேர் ப்ளேயர் (VirtualBox or VMware Player) போன்ற அப்ளி கேஷன் புரோகிராம்கள் உங்களுக்கு உதவும்.


1.லினக்ஸ்: 

விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றான இயக்க முறைமைகளில், முதலில் நிற்பது லினக்ஸ் சிஸ்டம் தான். இதனை மட்டுமே மாற்றாகப் பலர் உறுதியாகக் கூறுகின்றனர். 

இது Linux distributions.Ubuntu and Mint எனப் பல வகைகளில் கிடைக்கிறது. இது யூனிக்ஸ் சிஸ்டம் போன்ற இயக்கத்தைக் கொண்டது. இதனுடன் FreeBSD என்ற சிஸ்டமும் கிடைக்கிறது. இது வேறு ஒரு கட்டமைப்பினைக் கொண்டிருந்தாலும், லினக்ஸ் சிஸ்டத்தில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இதிலும் இயங்குவதைக் காணலாம்.


2. குரோம் ஓ.எஸ்.: 

இரண்டாவதாக நமக்குக் கிடைப்பது குரோம் ஓ.எஸ். இது லினக்ஸ் கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டதாகும். ஆனால், இதன் சாப்ட்வேர் மற்றும் டெஸ்க்டாப் இயக்கங்கள் குரோம் பிரவுசர் மற்றும் குரோம் அப்ளிகேஷன்களை மட்டுமே இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 

இதனைப் பொதுவான் பெர்சனல் கம்ப்யூட்டர் சிஸ்டம் என்று சொல்ல இயலாது. குரோம் புக்ஸ் என அழைக்கப்படும், தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களில் மட்டுமே பதிந்து இயக்க முடியும். 


3. ஸ்டீம் ஓ.எஸ்.: 

தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், இது லினக்ஸ் வகையில் ஒன்று எனச் சொல்லலாம். இது இன்னும் சோதனை முறையில் தான் உள்ளது. இருப்பினும், இதனை புதிய PC gaming operating system என வகைப்படுத்தி உள்ளனர். 

வரும் 2015ல் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்த கம்ப்யூட்டர்களை வாங்கலாம். அவை steam machines என அழைக்கப்படும்.மேலும் தகவல்களுக்கு http://store.steampowered.com/livingroom /SteamOS/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்ல வேண்டும்.


4. ஆண்ட்ராய்ட்: 

இந்த சிஸ்டமும் லினக்ஸ் கட்டமைப்பினையே பயன்படுத்துகிறது. ஆனால், இதன் செயல் குறியீடுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் லினக்ஸ் சிஸ்டம் தரும் வசதிகளிலிருந்து மாறுபட்டவை. முதலில் இவை ஸ்மார்ட் போன்களுக்கு எனவே வடிவமைக்கப்பட்டவை. 

பின்னர் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு உருவாக்கப்பட்டன. தொடர்ந்து பலர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையிலும் இதனைக் கொண்டு வந்துள்ளனர். 

ஆனால், பெர்சனல் கம்ப்யூட்டருக்கான சரியான சிஸ்டம் இதுவல்ல. இன்றைய நிலையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இதில் இயக்க முடியாது. இருப்பினும் நீங்கள் விரும்பினால், இதனைப் பதிந்து இயக்க முடியும்.


5. மேக் ஓ.எஸ். எக்ஸ்: 

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம், மேக் கம்ப்யூட்டர்களில் பதிந்து கொடுக்கப்படுகிறது. இதனை நாமாக எந்த கம்ப்யூட்டரிலும் பதிய முடியாது. இதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் உரிமம் வழங்கும் பழக்கம் ஒரு தடையாக உள்ளது. 

மேலும், இதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை, ஆப்பிள் நிறுவனத்தின் அனுமதி இன்றி இயக்க முடியாது. ஆனாலும், சிலர் இதனைப் பதிந்து இயக்குகின்றனர். அத்தகைய கம்ப்யூட்டர்களை ""ஹேக் இன் டோஷ்'' (hackintoshes) என அழைக்கின்றனர்.


வர இருக்கிறது விண்டோஸ் 9

மிகப் பெரியஎதிர்பார்ப்புகளுடனும், முற்றிலும் மாறுபட்ட தொழில் நுட்பத்துடனும் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களின் ஆதரவினைப் பெறுவதில் வெற்றி அடையவில்லை. 

வழக்கமான இயக்கத்தில், முற்றிலுமாக மாறுபட்ட மாறுதல்களை மேற்கொள்ள பயனாளர்கள் தயங்கினார்கள். 

விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கான அப்டேட் வந்தும் கூட, விண்டோஸ் 8 பயனாளர்களின் எண்ணிக்கை இன்னும் எதிர்பார்த்தபடி உயரவில்லை.

விண்டோஸ் 8 மூலம், பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், டேப்ளட் பி.சி.க்களையும் ஒருங்கிணைக்க மைக்ரோசாப்ட் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, மக்கள் அவ்வளவாக ஆதரவினை அளிக்கவில்லை.

எனவே, அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், விண்டோஸ் 9 என்னும் அடுத்த தொகுப்பினை, மக்களுக்கு பயன்படுத்தி பார்க்க சோதனை முறையில் மைக்ரோசாப்ட் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சீன நிறுவனம் ஒன்று இதனை அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்த கூடுதல் தகவல்கள் எதனையும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.


Swift - ஆப்பிள் தரும் புதிய புரோகிராமிங் மொழி

வேகம் மற்றும் இயக்க முறைமைகள் இடையே ஒருங்கிணைப்பு தருவதனை 
முக்கிய இலக்காகக் கொண்டு, அவற்றை வழங்கப் பயன்படுத்த Swift என்ற புதிய புரோகிராமிங் மொழியினை ஆப்பிள் வழங்குகிறது. 

தற்போது சோதனை முறையில் உள்ள Xcode 6 IDE என்ற கட்டமைப்பின் ஒரு பிரிவாக இந்த மொழி தரப்படுகிறது. இந்த மொழி ஓ.எஸ். எக்ஸ் மற்றும் ஐ.ஓ.எஸ் சிஸ்டங்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. 

"கூடுதல் செயல் திறன் வேகம், நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது' என ஆப்பிள் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரெய்க் பெடரிகி தெரிவித்துள்ளார். 

ஆப்பிள் நிறுவனம் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ObjectiveC மொழி போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இதில் இ மொழி பின்புலம் இருக்காது. இந்த மொழியைப் பயன்படுத்தி குறியீடு வரிகள் அடங்கிய புரோகிராம் எழுதுவது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருக்கும். 

வரிகளில் உள்ள கட்டமைப்பு படித்து புரிந்து கொள்வதற்கு மிக எளிதாக இருக்கும். அதே நேரத்தில் இயக்க வேகம் மிக அதிகமாக இருக்கும் என இந்த மொழி குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. 

ஆப்பிள் சாதனங்களுக்கு புரோகிராம்களை வடிவமைப்பவர்கள் இதனை உடனே பயன்படுத்தத் தொடங்கலாம்.


சாம்சங் வழங்க இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்

தொடர்ந்து தன் முதல் இடத்தினை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தக்க வைத்திட, அனைத்து வகை மாடல் போன்களையும் சாம்சங் தயாரித்து வழங்கி வருகிறது. 

விரைவில், பட்ஜெட் விலையில், தொடக்க நிலை மொபைல் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. 

இதன் மாடல் எண் SMG350E. இது ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 

1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் சிப் இதன் இயக்கத்திற்கு துணை புரிகிறது. ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. 5 எம்.பி. திறனுடன் கூடிய பின்புறக் கேமரா ஒன்றும், வீடியோ அழைப்பு பயன்பாட்டிற்கு முன்புறக் கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6,070 ஆக இருக்கும். 

பட்ஜெட் மற்றும் நடுநிலை போன்கள் விற்பனைச் சந்தையில், சாம்சங் என்றுமே முதன்மை இடத்தினைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆனால், தற்போது மோட்டாராலோ நிறுவனத்தின் போன்கள், இதற்குச் சரியான போட்டியினை வழங்கி வருகின்றன. 

அந்த வகையில், மோட்டாராலோ நிறுவனத்தின் அண்மை வெளியீடான, மோட்டோ இ (Moto E) போனுக்கு போட்டியாக (விலை ரூ. 6,999), சாம்சங் மேலே குறிப்பிட்ட போனைச் சந்தையில் இறக்குகிறது.


இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள்

கோடிக்கணக்கில் தேவையற்ற மின் அஞ்சல்களும், பல ஆயிரம் எண்ணிக்கையில் கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களும், எண்ணிப் பார்க்க இயலாத வகையில், ஹேக்கர் தாக்குதல்களும் இடம் பெற்றிருக்கும் இணைய வெளியில், பாதுகாப்பாக ஒருவர் தனக்கான தகவல்களைத் தேடுவது என்பது அதிகத் திறன் வேண்டும் ஒரு செயல்பாடாகத்தான் இருக்கும், இருக்கிறது. 

இருப்பினும், பல வேளைகளில் நாம் தெரிந்தே சில ஆபத்து வளையங்களில் சிக்கிக் கொள்கிறோம். அது போன்றவற்றைச் சரியாக உணர்ந்தால், இந்த ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம். அவற்றை இங்கு பார்ப்போம். 


1. விளம்பரங்கள்: 

இணையத்தில் மிக எளிதாக நாம் மேற்கொள்ளக் கூடிய செயல், அதன் தளங்களில் உலா வருவதுதான். ஆனால், அது நாம் எண்ணுகிறபடி, அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. 

அதில் நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் புதைக்கப்பட்டிருக்கும் வெடி குண்டுகள் ஏராளம். நம்மை இழுத்து அழுத்தும் புதைகுழிகளும் கணக்கிலடங்காதவை. இணையத்திற்கு புதியதாய் வரும் பலர், இவற்றில் தங்களை அறியாமலேயே, தாங்கள் விரும்பா மலேயே விழுந்து இழப்பினைச் சந்திக்கின்றனர். 

இவற்றில் முதல் வகை நிறுவனங்களின் விளம்பரங்களாகும். வர்த்தகத்தில் தொடர்ந்து இயங்க, பல நிறுவனங்கள் விளம்பரங்களை இணையத்தில் இயங்கும் தளங்களில் பதிக்கின்றன. இவை நமக்குத் தேவைப்படாத நிலையிலும், அவற்றிற்கான லிங்க்குகளில் கிளிக் செய்து, நம்மைப் பற்றிய தகவல்களைத் திருடும் விற்பனைக்கான பக்கங்களில் சிக்கிக் கொண்டு நம்மை இழக்கிறோம். 

எனவே, உண்மையான விளம்பரங்களை நாம் அறிந்து கொண்டு, நம் தேவைகளுக்கான விளம்பரங்களில் மட்டுமே கிளிக் செய்து தொடர்ந்து இணையப் பக்கங்களைக் காண வேண்டும்.


2. போலியான தளங்கள்: 

இணையத்தில் பிரபலமான நிறுவனங்களின் பெயர்களில் பல போலியான தளங்கள் அமைக்கப்பட்டு இயங்குகின்றன. இணையத்திற்குப் புதியதாய் வரும் பலர், இணையதளங்களின் பெயரை டைப் செய்திடுகையில், பெயர்களில் சில சிறிய தவறுகளுடன் டைப் செய்திடுகின்றனர். 

இது போன்ற சறுக்கல்களின் அடிப்படையில், பலர் பிரபல நிறுவனங்களின் பெயர்களில், மிகச் சிறிய மாற்றங்களுடன் கெடுதல் விளைவிக்கும் தளங்களை அமைத்து, இவர்களைச் சிக்க வைக்கின்றனர். 

எடுத்துக்காட்டாக, "google.com” என்பதனை வேகமாக டைப் செய்கையில், "gooogle.com” எனப் பலர் டைப் செய்துவிடுகின்றனர். அல்லது இதே போன்று வேறு சில தவறுகளை ஏற்படுத்தி விடுகின்றனர். உடன் அவர்கள் இந்த தவறான பெயர்களில் உருவாக்கப்பட்டு அமைத்திருக்கும் பக்கங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு மாட்டிக் கொள்கின்றனர். 

சரியான தளங்கள் எவை என எப்படி அறிவது? அந்த தளங்களின் கீழாக அல்லது அவற்றின் முகவரிக் கட்டங்களில், சிறிய தாழ்ப்பாள் (padlock) போன்ற ஒன்றைத் தேடிப் பார்க்கவும். 

அப்படி ஒன்று தரப்பட்டிருந்தால், அவை நீங்கள் தேடும் நிறுவனத்தின் பாதுகாப்பான தளமாக இருக்கும். நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் வங்கிகள் போன்றவற்றின் இணைய தளங்களில் இந்த பாதுகாப்பான அடையாளத்தைப் பார்க்கலாம். 

தற்போது, வங்கிகள் போன்ற பணம் கையாளும் நிதி நிறுவனங்கள் SiteKey என்ற ஒரு தொழில் நுட்பத்தினைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றனர். 

இதன் மூலம் குறிப்பிட்ட வங்கி இணைய தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தன் நிதி கணக்கு சார்ந்து ஒரு கீயை உருவாக்கிப் பயன்படுத்தலாம். போலியான தளங்களில் இது எடுபடாது. அதே போல மற்றவர்களும் உங்கள் கணக்கினைப் பயன்படுத்த முடியாது. 


IOS 8 - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய Operating System

சென்ற வாரம் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த பன்னாட்டளவிலான ஆப்பிள் நிறுவனக் கருத்தரங்கில், அந்நிறுவனம் வெளியிட இருக்கும், மொபைல் சாதனங்களுக்கான, ஐ.ஓ.எஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல் வெளியிடப்பட்டது. 

ஆண்டு தோறும் ஒருமுறை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென புரோகிராம்களை உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கினை நடத்துவது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கம். 

சென்ற வாரம் நடைபெற்ற இந்த கருத்தரங்கு இவ்வகையில் 25 ஆவது கருத்தரங்காகும். நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் இதனைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதில் 6,000க்கும் மேற்பட்ட புரோகிராம் வடிவமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

முந்தைய கருத்தரங்குகளில், ஐபோன் போன்ற சாதனங்கள் அறிமுகத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, இந்த சாதனங்களுக்கான சாப்ட்வேர் தயாரிப்பு குறித்து அதிகத் தகவல்கள் தரப்பட்டன. 

கருத்தரங்கு நடக்கும் போதே, அதில் புரோகிராம்களை வடிவமைப்பவர்களுக்கு, புதிய ஓ.எஸ். சோதனை முறையில் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கும் சோதனை முறையில் பயன்படுத்த வரும் மாதங்களில் வழங்கப்படும். 

இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழக்கம் போல் காட்சித் தோற்றங்களில் புதிய மாற்றங்களின் மேல் தன் கவனத்தைக் கொள்ளாமல், அதன் செயல்பாடுகளில் அதிக கவனம் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் சிஸ்டங்களைப் பயன்படுத்தும் பயனாளர்கள் இதுவரை எதிர்பார்த்து கேட்டிருந்த பல செயல்பாடுகள், இந்த புதிய சிஸ்டத்தில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. 

ஐ.ஓ.எஸ். சிஸ்டத் தின் அறிவிப்பு முறை, ஆப்பிள் டெஸ்க்டாப் சிஸ்டத்துடனான ஒருங்கிணைப்பு, ஐ க்ளவ்ட் நிர்வாகம், எஸ்.எம்.எஸ். க்ளையண்ட் மெசேஜ் நிர்வாகம், உடல்நலம் குறித்துத் தெரிந்துகொள்ள பல அப்ளிகேஷன்கள் என அனைத்தும் மக்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் அமைக்கப்படும் எனத்தெரிகிறது.

இதன் சில சிறப்பு அம்சங்கள் என இக்கருத்தரங்கில் காட்டப்பட்டவை குறித்து இங்கு காணலாம். நோட்டிபிகேஷன்களைப் பொறுத்த வரை, அவை கிடைக்கும்போது, அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கத்தினை நிறுத்தாமல், அதனைக் கவனித்து அதற்கான நடவடிக்கையினை எடுக்க முடியும். 

ஐ க்ளவ்ட் இயக்க முறை, கூகுள் ட்ரைவ் மற்றும் ட்ராப் பாக்ஸ் போல மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் சேவ் செய்யப்படும் பைல்களைத் தேடிப் பெறும் டூல்கள் தரப்பட இருக்கின்றன. நாம் பயன்படுத்தப்படும் ஆப்பிள் சாதனங்களின் அனைத்து படங்களும், வீடியோ பைல்களும், ஐ க்ளவ்ட் உடன் ஒருங்கிணைக்கப்படும். 

இனி அப்ளிகேஷன் மூலம் மேக் மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்கள் இடையே ஒருங்கிணைந்த இணைப்பு நடைபெறும். இதுவரை மேக் - மேக் மற்றும் ஐ.ஓ.எஸ். - ஐ.ஓ.எஸ். சாதனங்கள் இணைப்பு மட்டுமே நடைபெற்று வந்தன. 

தன் புரோகிராம்களையும், மிகவும் நம்பிக்கை கொண்ட சிலரின் புரோகிராம்களை மட்டுமே அனுமதித்து வந்த ஆப்பிள், இனி தர்ட் பார்ட்டி என்று அழைக்கப்படும் பிற வல்லுநர்கள், ஆப்பிள் சாதனங்களுக்காக எழுதப்படும் புரோகிராம்களையும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து அனுமதிக்க இருக்கிறது. 

தனி நபர்கள், இந்த சிஸ்டத்தில் இயங்குவதற்கெனத் தயாரிக்கப்படும் புரோகிராம்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஸ்டோரில் இவை கிடைக்கும். 


2020ஆம் ஆண்டில் 50 கோடி மொபைல் இணைய பயனாளர்கள்

எரிக்சன் இந்தியா நிறுவனத்தின் கணிப்புப்படி, இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில், மொபைல் பிராட்பேண்ட் பயனாளர் களின் எண்ணிக்கை 114.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2013ல் இந்த எண்ணிக்கை 79 கோடியே 50 லட்சமாக இருந்தது. இதே போல, ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையும், 2013ல் 9 கோடியிலிருந்து, 2020ல் 45 சதவீதம் உயர்ந்து, 52 கோடியாக உயரும். 

அதிக எண்ணிக்கையில் பயனாளர்களும், அதிவேக பிராட்பேண்ட் இணைப்பும், மக்கள் வாழ்க்கையின் அமைப்பையே மாற்றிவிடும். அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொள்ளும் வழிகளும், வர்த்தகம் மேற்கொள்ளும் நிலைகளும் முற்றிலும் மாறுதலை மேற்கொள்ளும். 

மக்கள் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும், இணைய இணைப்பு வேண்டும் என எதிர்பார்க்கும் நிலை ஏற்படும். 

சமூக தளங்களின் தாக்கத்தினால், மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வீடியோ பைல்களின் பரிமாற்றமும் உயர்கிறது. இவை அதிகரிக்கும் போது, இணைய வேகமும் கூடுதலாக தேவைப்படும். 

ஆனால், இப்போது மொபைல் வழி பிராட்பேண்ட் இணைப்பு மிக மந்தமாகவே இருக்கிறது. முயற்சி செய்திடும் மூவரில் ஒருவருக்கே இணைப்பு கிடைக்கிறது. பயனாளர்கள், இப்போது மிகச் சிறப்பாகச் செயல்படும் இணைய இணைப்பினைத் தாங்கள் எங்கு சென்றாலும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். 

பயனாளர்கள் பயன்படுத்தும் பலவகையான அப்ளிகேஷன்கள், பைல்கள் இன்னும் அதிக திறன் மற்றும் வேகம் கொண்ட இணைய இணைப்பினை தேவையாகக் கொண்டுள்ளன. எடுத்துக் காட்டாக, சமூக தளங்களில் இப்போது செய்திகளும், படங்களும் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இனி வருங்காலத்தில், எச்.டி. வீடியோ பைல்கள் பரிமாறிக் கொள்ளப்படும் நிலை வரலாம். 

உயர் ரக நவீன மொபைல் சாதனங்கள், நெட்வொர்க் செயல்பாடுகள், அப்ளிகேஷன் செயலாக்கங்கள் அனைத்தும் புதிய இணைய தகவல் பரிமாற்றத்தை எதிர்பார்க்கின்றன. இது ஓர் அத்தியாவசியத் தேவையாய் உருவெடுத்து வருவதால், நிச்சயமாய் அதற்கேற்ற கண்டுபிடிப்புகளும், வடிவமைப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.


நோக்கியா லூமியா 630 மற்றும் டூயல் 630

இந்தியாவில், நோக்கியா லூமியா 630 மற்றும் லூமியா 630 டூயல் சிம் என இரண்டு புதிய மொபைல் போன்களை, நோக்கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை முறையே ரூ.10,500 மற்றும் ரூ.11,500.

இந்த போன்கள் குறித்து சென்ற மாதம் அறிவிப்பு வெளியானது. இவற்றில் தெளிவான கருப்பு ஐ.பி.எஸ். டிஸ்பிளே தரும் 4.5 அங்குல திரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் தரப்பட்டுள்ளது. 

இதன் ஸ்நாப் ட்ராகன் 400 குவாட் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. விண்டோஸ் போன் 8.1 இதன் ஓ.எஸ். முன்புறமாக 720p HD வீடியோ பதிவு மேற்கொள்ளக் கூடிய 5 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது.

இதே வடிவமைப்பில் இரண்டு சிம் இயக்கம் கொண்டதாக, இரண்டாவதாகக் கூறப்பட்ட போன் வெளி வந்துள்ளது. 

இரண்டு சிம்களுக்கிடையே அழைப்புகளை முன்னோக்கி அனுப்பும் வசதி தரப்பட்டுள்ளது. இரண்டிலும் 1830 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது. 

இவற்றின் ராம் நினைவகம் 512 எம்.பி. கொள்ளளவு கொண்டது. இதன் ஸ்டோரேஜ் 8 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். 

மே 16 முதல் இரண்டு சிம் மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில், ஒரு சிம் போன் விற்பனைக்குக் கிடைக்கும். வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் தரப்படுகின்றன.


ஜிமெயில் இணைப்புகளிலும் தேடலாம்

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவரா? பயன்படுத்தாதவர் வெகு சிலரே இருக்க முடியும். பல்வேறு வசதிகளைத் தரும் கூகுளின் வெப் மெயில் தளமான ஜிமெ யில், இப்போது புதியதாக இன்னொரு வசதியையும் தருகிறது. 

இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத் தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல் செய்திகளைப் பெற முடியும். 

ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும் எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது அஞ்சல் செய்தியின் சொற்கள் வழி தேடிப் பெற்று வந்தோம். 

தற்போது, மெயில் உடன் இணைக்கப்பட்டுள்ள டாகுமெண்ட்கள் எந்த பார்மட்டில், (டாக், பி.டி.எப்.,) இருந்தாலும், அவற்றிலும் தேடலை நடத்தி நாம் விரும்புவதைப் பெறலாம். 

தேடல் கட்டத்தில் has:attachment என்றபடி அமைத்து, அதன் பின்னர், தேடலுக்கான சொல்லை அமைக்க வேண்டும். 

எடுத்துக்காட்டாக, ஒபாமா (Obama) என்ற சொல் உள்ள இணைப்பு கோப்பினை அறிய, has:attachment Obama எனத் தர வேண்டும். 

நீங்கள் இந்த தேடலை பி.டி.எப். பைல்களில் மட்டும் தேட விரும்பினால், has:attachment filename:PDF Obama என அமைக்கப்பட வேண்டும். 

முன்பு அட்டாச்மெண்ட் பைல்களில் தேட வேண்டும் எனில், அவை டெக்ஸ்ட் அல்லது எச்.டி.எம்.எல். பைல்களாக இருக்க வேண்டும். 

Word, Excel, and Powerpoint போன்ற பார்மட் கொண்ட பைல்களில் தேட முடியாது. தற்போது இந்த வசதி தரப்பட்டுள்ளது. 


இணையத்தை வளர்த்த வல்லுநர்கள்

நீர் மட்டுமல்ல, இணையம் இன்றியும் இந்த உலகம் வாழாது என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகிறோம். நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர். 

இவர்களில் சிலர், முக்கிய சில திருப்பங்களை இணைய வளர்ச்சியில் ஏற்படுத்தி பங்காற்றியுள்ளனர். அவர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் இங்கு காணலாம்.


1. மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreesen): 

Mosaic என்னும் பிரவுசரை உருவாக்கியவர். முதல் நிலையில், இணையத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றதில், இந்த பிரவுசருக்கு இடம் உண்டு. பின்னால், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற இணைய பிரவுசரை உருவாக்குவதில் இவர் அதிகம் துணை புரிந்தார். 1990 ஆம் ஆண்டுவாக்கில், இணையப் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்த போது, இந்த பிரவுசரின் இடமும் முதல் இடத்தில் இருந்தது. 


2. விண்ட் செர்ப் (Vint Cerf): 

இணையத்தை உருவாக்கிய தந்தை என, Bob Kahnஎன்பவரோடு சேர்த்து அழைக்கப்படுபவர் விண்ட் செர்ப். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணி அதிகம் உதவியது. 

இவர் அமைத்த MCI mail சிஸ்டம் தான் இன்றைய மின் அஞ்சல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது. இணைய பெயர்களை வரையறை செய்திடும் ICANN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers என்னும் அமைப்பினை உருவாக்கிய முன்னோடி இவர்.


3. இராபர்ட் பாப் கான் (Robert “Bob” Kahn): 

இவருடைய தோழரும் உடன் பணியாற்றியவருமான விண்ட் செர்ப் போல இவரும் இணையத்தை உருவாக்கிய தந்தை என அழைக்கப்படுகிறார். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணியும் அதிகம் உதவியது. இவர் ஆய்வுகளை மேற்கொள்ள உதவியாக Corporation for National Research Initiatives (CNRI) என்னும் அமைப்பினை உருவாக்கினார். இந்த அமைப்பு நெட்வொர்க் தொழில் நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்தியது. 


4. லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் (Larry Page and Sergey Brin): 

ஆய்வுத் திட்டமாக முதலில் கூகுள் என்ற ஒன்றைத் தொடங்கியவர்கள் இவர்கள். அப்போது ஸ்டான்போர்ட் பல்கலையில் மாணவர்கள். இவர்கள் உருவாக்கிய கூகுள் கட்டமைப்பு இணையப் பயனாளர்கள் தகவலைத் தேடி அறிவதில் புதிய வழிகளை மாற்றிக் காட்டியது. இன்று Google.com என்பது இணையத்தின் மாறா நிலை தளமாக இயங்கி வருகிறது. 


5. ஜிம் கிம்சி (Jim Kimsey): 

இணைய சேவை வழங்குவதில் உலகிற்கே முன்னோடியாக விளங்கும் AOL நிறுவனத்தை நிறுவி, அதன் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றியவர். ஒரு சமயம், இந்நிறுவனத்தின் இணைய சேவையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. 

இணையத்தில் ஒருவருக் கொருவர் நேரடியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் internet chat மற்றும் instant messaging இவர் நிறுவனத்தால் பிரபலமாகியது. மேலும், தங்களுக்கேற்ற வகையில் இணைய தளத்தினை உருவாக்கிய வழிகளும் இவர் தந்தவையே. 


128 ஜிபி கொள்ளளவில் மைக்ரோ SD கார்ட்

தற்போது வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் மொபைல் போன்கள், தங்களின் மெமரியை 128 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறனையும் வசதியையும் தருகின்றன. 

இதற்கேற்ப இயங்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றை சான் டிஸ்க் (SanDisk) நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.9,999.

அண்மையில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில், இந்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் (SanDisk Ultra microSDXC UHSI) அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதில் 16 மணி நேரம் ஓடக்கூடிய ஹை டெபனிஷன் திரைப்படங்கள், ஏறத்தாழ 7,500 பாடல்கள், 3,200 போட்டோக்கள் மற்றும் 125 சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒரே நேரத்தில் பதிந்து வைத்து இயக்கலாம். 

இது தண்ணீர் மற்றும் சீதோஷ்ண நிலையினால் பாதிப்படையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நொடிக்கு 30 எம்.பி. என்ற அளவில் தகவல்களை இதனுடன் பரிமாறிக் கொள்ளலாம். 

இந்தியாவில் இதன் விலை ரூ.9,999 என்பதுதான் பலரை இதனை வாங்கிப் பயன்படுத்த தயங்க வைக்கலாம். இருப்பினும், போகப் போக விலை குறைக்கப்படும் எனப் பலர் எதிர்பார்க்கின்றனர்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes